கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த வெளிநாட்டு குழுவினருக்கு மேளதாளங்கள், பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றது. இதன்பின் இந்தியாவில் ஜி-20 தலைமைத்துவத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமுடன் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.
இதனையொட்டி, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாடு முதன்முறையாக நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக வெளிநாட்டு குழுவினர் நேற்று அங்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, மேளதாளங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மாநாட்டுக்கு வருகை தரும் வழியெங்கும் வரவேற்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் இந்த மாநாடு வரும் 11ம்தேதி வரையிலான 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இங்கு நடந்த நிதிசார் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது,’ ஜாதி, மதங்களை கடந்து மேற்கு வங்கத்தில் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.