கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்துத் தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தி
ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு
சபாநாயகரிடம் முறைப்பாடு
பராளுமன்றத்தில் விசேட அறிக்கை
எதிர்வரும் 17ஆம் திகதி அமைச்சின் செயலாளரை குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கத் தீர்மானம்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசேட கூட்டம் அதன் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (05) நடைபெற்றது. இதில் கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
- கோப் குழுவின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது மற்றும் குழுவின் வேலைகளில் அதன் உறுப்பினர்களை தீவிரமாக ஈடுபடுத்துவது என்ற எதிர்பார்ப்புடன் நான்கு உபகுழுக்களுக்கு 12 உறுப்பினர்கள் நியமனம்.
- 2023ஆம் ஆண்டில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட வேண்டிய மற்றும் தற்பொழுது அழைக்கப்பட்டு பின்தொடர்புகளை மேற்கொள்ள வேண்டிய நிறுவனங்கள் யாவை என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்பட கோப் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு களப்பயணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
- கௌரவ பிரதமர் தலைமையில் 2022 டிசம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது” உத்தியோகபூர்வ நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்பாடுகள் மற்றும் கோப் குழுவின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துப் பற்றி கலந்துரையாடல்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் மற்றும் கோப் குழுவின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கோப் குழுவுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் அவர் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்திருந்த போதிலும், அவர் குறிப்பிட்டதைப் போன்று பாராளுமன்றத்தின் நிதி முகாமைத்துவத்தை பலப்படுத்த பாராளுமன்ற முறைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தொடர்பில் நிலையியற் கட்டளைக்கு அமைய தமக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீறப்படவோ அல்லது அவ்வாறு செயற்பட எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் குழுவுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அரசியலமைப்பு மற்றும் எழுதப்பட்ட சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கடமைகளை நடைமுறைப்படுத்தும்போது செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் அரச துறையினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பாராளுமன்றத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக, இவ்விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பின்வரும் முன்மொழிவுகளும் தீர்மானங்களும் குழுவினால் முன்வைக்கப்பட்டன.
- தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்து பிழையான முன்னுதாரணமாக அமைந்திருப்பதுடன், கோப் குழுவை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருப்பதால் இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது குறித்து கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அவருடைய பணியாட்தொகுதியிடம் குழுவின் கவலையைத் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
- இந்தக் கருத்துத் தொடர்பில் கௌரவ சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தல்.
- இந்தக் கருத்தின் ஊடாக சட்டவாக்க செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் தலையீடு செய்வது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டு கௌரவ ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தல்.
- இதன் நகலை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு அனுப்புதல்.
- கடந்த கோப் குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், எதிர்வரும் 17ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தல் மற்றும் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் செயலாளரை மீண்டும் வலியுறுத்தல்.
- வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் கடந்த கோப் குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்ட விசேட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
- அத்துடன் தற்பொழுது நிலவும் பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அழைப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நளின் பண்டார, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத்.சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சாணக்கியன் ராசமாணிக்கம், கௌரவ ராஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே மற்றுமு் கௌரவ (கலாநிதி) சரித ஹேரத் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.