ரப்பர் இட்லி கொடுக்கிறாங்க… ஓசூர் ஹோட்டலில் பரபரப்பு!

ஓசூரில் ரப்பர் இட்லி என குற்றம் சாட்டி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஹோட்டலில் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த இட்லிகளை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. சிறு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி அவர்கள் ஹோட்டல் நடத்துபவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு வேறு இடத்திலிருந்து இட்லி குறைந்த விலைக்கு வருவதாகவும், அதனை நாங்கள் சட்னி, சாம்பாரோடு விற்பனை செய்து வருகிறோம், இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுகிறது என தெரிவித்தனர். ஆனாலும் வாடிக்கையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

கடையில் இட்லி சாப்பிட வந்த வாடிக்கையாளர் கூறும் போது, தொடர்ந்து இதுபோன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த இட்லிகளை விற்காதீர்கள் என்று கூறியும் தொடர்ந்து விற்று வருகின்றனர். ஓசூர் பகுதிகளில் உள்ள ஏராளமான ஹோட்டல்களில் இதுபோன்ற ரப்பர் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் உடல் நல பாதிப்பு ஏற்படும்; எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் விற்கப்படும் இட்லியின் தரம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், இந்த சம்பவம் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.