கர்நாடகாவில், சாதியை காரணம் காட்டி கோயிலில் பெண்ணை தாக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து அறங்காவலரே வெளியேற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அறங்காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே உள்ள அம்ருதஹள்ளி பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. இதன் அறங்காவலராக இருப்பவர் முனிகிருஷ்ணா. இந்தக் கோயிலுக்கு கடந்த டிசம்பர் மாதம் வழிபட வந்த ஒரு பெண்ணை, அறங்காவலர் முனிகிருஷ்ணா தாக்கியுள்ளார். அத்துடன் சாதி வன்மத்துடன், ’உன்னை கோவிலுக்குள் அனுமதித்தது யார்?’ என்று பேசினார். பாதிக்கப்பட்ட பெண், அறங்காவலர் தன்னைத் தாக்கி தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்து கோயிலில் இருந்து வெளியேற்றியதாக, காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து அம்ருதஹள்ளி காவல் நிலைய ஆய்வாளர் குருபிரசாத் கூறுகையில், `பாதிக்கப்பட்ட பெண், கோவில் கருவறையில் உள்ள சிலைக்கு அருகில் அமர விரும்பியதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பூசாரி மீது அவர் எச்சில் துப்பியதாகவும் அறங்காவலர் முனிகிருஷ்ணா கூறியுள்ளார். மேலும், அப்பெண் அமைதியாக வெளியேற மறுத்ததால், கோயிலை விட்டு வெளியே இழுத்துச் சென்றதாகவும் அறங்காவலர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வலுவான வழக்குப் பதிவு செய்வதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், சாட்சிகளையும் சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.