ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் இடையேயான பனிப்போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை கடுமையாக விமர்சிப்பதும், பதிலுக்கு பா.ஜ.க-வினர் தி.மு.க-வை விமர்சிப்பதுமாக அரசியலில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பொங்கல் திருநாளை முன்னிட்டு தேநீர் விருந்தில் கலந்துகொள்ள ஆளுநர் அலுவலகம் அனுப்பி வைத்திருக்கும் அழைப்பிதழ் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், “கடந்த முறை வந்த அழைப்பிதழில் `தமிழ்நாடு’ அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்திருக்கும் அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.
நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டிருப்பதால் அதனைப் பயன்படுத்த மறுத்திருக்கிறார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்திருக்கும் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன், “மேதகு தமிழக ஆளுநர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழ், தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சாகியிருக்கிறது. அதில், தமிழ் அழைப்பிதழில் ‘தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது’ என்பதை சுட்டிக்காட்டிய மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், ஆங்கிலத்தில் `கவர்னர் ஆஃப் தமிழ்நாடு’ என்று இருப்பதை வசதியாக மறைத்தது ஏன்?
திராவிட மாடல் ஆட்சி என்பதால் காம்ரேடுகளுக்கும் திருட்டுத்தனம் அதிகமாகிவிட்டது. ‘உண்மையை மறைப்பவர்கள் தோழர்கள்’ என்பதற்கான இன்னொரு உதாரணம் இது!” என்று தெரிவித்திருக்கிறார்.