கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தினார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று ‛டுவென்டி-20′ மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‛டுவென்டி-20′ தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டி அசாமின் கவுகாத்தியில் இன்று (ஜன.,10) நடைபெற்றது.
இதில் ‛டாஸ்’ வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது.
முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தபோது சுப்மன் கில் 70 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ரோகித், 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 67 பந்தில் 83 ரன் குவித்து போல்டானார்.
அடுத்துவந்த விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே ஸ்ரேயாஸ் ஐயர் (28), லோகேஷ் ராகுல் (39), ஹர்த்திக் பாண்ட்யா (14), அக்சர் படேல் (9) வெளியேறினர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோஹ்லி சதமடித்து, 113 ரன்னில் கேட்சானார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. முகமது ஷமி 4 ரன்னுடனும், சிராஜ் 7 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை தரப்பில் ரஜிதா 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 374 என்ற கடின இலக்குடன் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 306ரன் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் இந்திய அணி 67 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும் முகமத் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement