புதுச்சேரி, சாந்தி நகர் விரிவு 2-வது குறுக்குத் தெரு குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அதனால் வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த பள்ளி வேனின் கண்ணாடி நொறுங்கிக் கிடந்தது, அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் உருளையன்பேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில இருந்தன. அதனால், நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாற்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்றதும், நடந்து சென்றதும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களைக் கொண்டு போலீஸார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இறுதியில் அவர்கள், கண் டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதில் 4 பேரை போலீஸார் நேற்றிரவே கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூபில் பார்த்திருக்கின்றனர். அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. உடனே அதைப் பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகளைச் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்திருக்கின்றனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்திருக்கிறது. மற்றொரு வெடிகுண்டை வீசியபோதுதான் சத்தத்துடன் வெடித்திருக்கிறது.
இதனையடுத்து 4 பேரையும் போலீஸார் மீட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை தேடிவருகின்றனர். வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட இந்த 6 சிறுவர்களில் 5 சிறுவர்களின் குடும்பத்தினர் எந்த குற்றப் பின்னனியிலும் தொடர்பு இல்லாதவர்கள். ஒரு சிறுவனின் தந்தை மட்டும் சில வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. குற்றச் செயலுக்காக தாங்கள் வெடிகுண்டை தயாரிக்கவில்லை என்றும், கெத்து காட்டுவதற்காக தயாரித்ததாகவும் மாணவர்கள் கூறியிருக்கின்றனர். ஆயினும் வேறு யாருக்காவது இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.