தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மேலானமேட்டைச் சேர்ந்த விவசாயி திருஞானசம்பந்தம் (வயது 51). திருஞானசம்பந்ததிற்கும் அவரின் வீட்டின் அருகிலுள்ள ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நில பிரச்சனையில் சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் மற்றும் சிலர் தாக்கியுள்ளனர்.
இது குறித்து சோழபுரம் காவல்நிலைய போலீசார் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிந்து கைதும் செய்தனர்.
இந்நிலையில், நிபந்தனை ஜாமீனில் அண்மையில் வந்த ராஜேந்திரன் மற்றும் சிலர், இன்று காலை திருஞானசம்பந்தத்தை கொலை செய்யும் நோக்குடன் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த திருஞானசம்பந்தத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சோழபுரம் காவல்நிலைய போலீஸார், வழக்கு பதிந்து தலைமறைவாகியுள்ள ராஜேந்திரன் மற்றும் அவரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத போலீசாரை கண்டித்து மருத்துவமனை வாயிலிலும், சோழபுரம் கடைத்தெருவிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.