மும்பையில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாக சித்திவிநாயக் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலுக்கு தினமும் எதாவது ஒரு வி.ஐ.பி வந்து தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்புகூட நடிகை கத்ரீனா கைஃப் தன்னுடைய கணவர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றார். மகாராஷ்டிராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஆறு மாதங்களான பிறகும், தொடர்ந்து இந்தக் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவைச் சேர்ந்த ஆதேஷ் பண்டேகர் இருந்துவருகிறார். இந்த நிலையில், அறங்காவலர் குழு மீது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் இது தொடர்பாக தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
இது குறித்துப் பேட்டியளித்த ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏ-வான சதா சர்வான்கர், “சித்திவிநாயக் கோயிலுக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து 15,000 லிட்டர் நெய் வாங்கப்பட்டது. ஆனால், அதை கொரோனா காலத்தில் அறங்காவலர்கள் விற்பனை செய்துவிட்டனர். அதே போன்று கோயிலுக்கு கியூஆர் கோட் அடிப்படையிலான தரிசனத்துக்காக சாஃப்ட்வேர் சிஸ்டம் பொருத்த ரூ.3.5 கோடிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்துக்கு வெறும் 40 முதல் 50 லட்சம் ரூபாய்தான் செலவாகும். கட்டட கட்டுமானப் பணி மற்றும் பராமரிப்பு பணியிலும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன” என்று தெரிவித்தார்.
இது குறித்து பண்டேகர் அளித்தப் பேட்டியில், “கோயில் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. கோயில் அறக்கட்டளையில் எந்தவித முறைகேடும், ஊழலும் நடக்கவில்லை. பணிகள் அனைத்தும் டெண்டர் முறையில் நடைபெறுகின்றன. அறக்கட்டளை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. அரசின் வழிகாட்டுதலின்கீழ் அறக்கட்டளை செயல்படுகிறது” என்றார்.
இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ட்ரஸ்டில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 நாள்களுக்குள் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.