டெல்லியில் டிஆர் பாலு, ரகுபதி; ஆளுநர் ரவி மீது குடியரசு தலைவரிடம் புகாரளிக்க திமுக திட்டம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீது புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களுடன் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து புகார் மனு அளிப்பார்கள் என திமுக தலைவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளை குடியரசுத் தலைவரிடம் விளக்கி, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்த உள்ளது. ஆளுநர் உரையில் மாற்றங்கள் செய்தது மற்றும் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே தமிழ்நாடு சட்டசபையிலிருந்து வெளியே சென்றது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ரவி காலதாமதம் செய்கிறார் என ஏற்கனவே திமுக குற்றம்சாட்டியுள்ளது.
image
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி உள்ளனர். நீட் மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வில்லிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது உள்ளிட்ட இலக்குகளுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிடப்பில் உள்ளன. முன்பு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும், இதே போல மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் திமுக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க அவகாசம் கோரி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது புகார் அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் திமுக அவகாசம் கோரியபோது, நேரம் ஒதுக்கப்படவில்லை என டி.ஆர். பாலு வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். ஆகவே குடியரசுத் தலைவர், திமுக குழுவை சந்திக்க அவகாசம் அளிப்பாரா என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.