எடப்பாடி அருகே சித்தூரில் கட்டிட தொழிலாளியின் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி, பெற்றோருக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன். இவருக்கு மைதிலி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் திவ்யதர்ஷினி (16) சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மூக்கு கண்ணாடி அணிவிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால், அவரது பெற்றோரால் கட்டிட வேலை செய்து போதிய வருவாய் ஈட்ட முடியாமல் பிள்ளைகளைக் காப்பாற்ற போராடி வந்த நிலையில் மூத்த மகள் திவ்யதர்ஷினிக்கு மூக்கு கண்ணாடி வாங்கி தர இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை தன்னால் மருத்துவ செலவு ஏற்படுவதாகவும், எனக்கு பின்னால் உள்ள தம்பி தங்கையை காப்பாற்ற பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதை நினைத்து திவ்யதர்ஷினி இன்று காலை பள்ளிக்கு சென்றவள் மீண்டும் காலை 10 மணிக்கு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
திவ்யதர்ஷினியின் பெற்றோர்களும் வேலைக்கு சென்றதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யதர்ஷினி, ‘என் தற்கொலைக்கு நான் மட்டுமே காரணம்; வேறு யாரும் காரணம் இல்லை. என்னால் ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்யப்படும் செலவு இனி இருக்காது. அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன்’ என்று எழுதி வைத்துவிட்டு தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய் மைதிலி வீட்டை கதவை உடைத்து திறந்து பார்க்கும் போது துப்பட்டாவில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்த தனது மகளை பார்த்து அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து திவ்யதர்ஷினியை இறக்கி பார்க்கும் போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்ததது.
உடனடியாக பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததை எடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பூலாம்பட்டி காவல் துறையினர் மாணவி திவ்யதர்ஷினி உடலை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கூனாண்டியூரில் கடந்த வாரம் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது எடப்பாடி அருகே சித்தூரில் 11 ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி தன்னால் பெற்றோர்களுக்கு செலவு ஏற்படுவதாகக் கூறி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் மாவட்ட மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மாணவர்களின் உயிரிழப்பை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டு உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM