கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து கவர்னர் மீது புகார் மனு அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த, ஜனாதிபதி திரவுபதி முர்முவை, தி.மு.க., – எம்.பி.,க்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தியபோது நடந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு புதுடில்லியில் உருவாகிஉள்ளது.
முழு விபரம்
உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலின்படி, சட்டசபையில் நடந்து முடிந்த சம்பவம் பற்றிய முழு விபரங்களையும் அனுப்பி வைக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
கவர்னரிடமிருந்து அறிக்கை வந்து சேர்ந்ததும், அது குறித்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்.
அதற்கு முன் கவர்னரையும், புதுடில்லிக்கு நேரில் வரவழைத்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில், எதிர்தரப்பான தி.மு.க.,வும், கவர்னருக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கோரிக்கை
ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, கவர்னர் பற்றி முறையீடு செய்வது என்று, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும் ஜனாதிபதியிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்திலும் நேரம் கேட்க திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக வாய்மொழியாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேடிக்கை என்னவெனில், ஏற்கனவே கடந்த தீபாவளி பண்டிகையின்போது ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கேட்கும், தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு ஒப்புதல் கேட்டு மனு அளிப்பதற்காக நேரம் கேட்டு, வாங்க முடியவில்லை.
அடுத்ததாக கடந்த நவம்பரிலும், கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சமயத்தில், கவர்னர் சில கருத்துகளை தெரிவிக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புகார் அளிப்பதற்காக ஜனாதிபதியிடம் மீண்டும் நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டனர்.
திட்டம்
இதற்காக புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அதை நேரில் சென்று கொடுக்க முயன்றும், முடியாமல் போனதால், கடைசியில் ஜனாதிபதியின் அலுவலகத்தில் யாரோ ஒருவர் மூலமாக மனுவை அளித்து விட்டு, விஷயம் சுமுகமாக முடிக்கப்பட்டது.
தற்போது ஒரு மாத இடைவெளி விட்டு, மீண்டும் ஜனாதிபதியை சந்தித்து, கவர்னரை நீக்கும்படி கோரிக்கை மனு அளிக்க, தி.மு.க., – எம்.பி.,க்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த முறையாவது அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையின் கதவுகள் திறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்