ஜாம்நகர்: ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து குஜராத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி நேற்று முன்தினம் இரவு அஸூர் ஏர் என்ற சர்வதேச விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 236 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் இருந்தனர். 2 மணி நேரத்தில் கோவா விமான நிலையத்தை அடைய இருந்த நிலையில் இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துக்கு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து உடனடியாக அஸூர் ஏர் விமானத்தின் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் விமானம் ேநற்று முன்தினம் இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமான பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து விமானம் மற்றும் விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளில் வெடிகுண்டு உள்ளதா என சோதனை நடத்தினார்கள். நேற்று பிற்பகல் இந்த சோதனை முடிவடைந்தது. விமானத்தில் எந்த வெடிபொருளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவசரமாக தரையிறக்கப்பட்டு சுமார் 15மணி நேரத்துக்கு பின் நேற்று பிற்பகல் 1.20மணிக்கு விமானம் அனைத்து பயணிகளுடன் கோவா நோக்கி புறப்பட்டு சென்றது.