மும்பை: பெங்களூர் விமான நிலையத்தில் 54பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக சென்ற சம்பவத்திற்காக பயணிகளிடம் கோர் பர்ஸ்ட் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் கோ பர்ஸ்ட் விமானம் புறப்பட்டது. விமானத்திற்காக காத்திருந்த 54 பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது. 54 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோ பர்ஸ்ட் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘கவனக்குறைவால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் மாற்று விமானங்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த 12 மாதங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உள்நாட்டில் பயணம் செய்வதற்கான ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குவதற்கு கோ பர்ஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.