ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி பிரிட்டன் விஞ்ஞானிகள் ஏமாற்றம்| British scientists are disappointed by the failure of the rocket launch project

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது.

இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ‘போயிங் 747’ என்ற விமானத்தில் 70 அடி உயர ‘லாஞ்சர்- ஒன்’ என்ற ராக்கெட்டை பொருத்தி, அதை ஒன்பது செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவ முடிவு செய்தது.

பிரிட்டனின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது. திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில், 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஆனால் விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி, புவி சுற்றுவட்டப் பாதையில் ஒன்பது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக பிரித்து நிலைநிறுத்த முடியாததால், திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் இடம்பெறாமல் போனது, அந்நாட்டு விஞ்ஞானிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு காலத்தில் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. தற்போதும் பிரிட்டன் வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

ஆனாலும், விண்வெளிக்கு ராக்கெட் செலுத்தும் திட்டத்தை, அவர்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.