சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் குறித்து சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வரும் 13-ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொடையூர் வட்டம், வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் மனித கழிவு கலக்கப்பட்டது.
இது தொடர்பாக சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களான, பேராசிரியர். முனைவர். சுவாமிநாதன் தேவதாஸ், பேராசிரியர். முனைவர். ஆர். ராஜேந்திரன், கோ. கருணாநிதி, மருத்துவர். சாந்தி ரவீந்திரநாத் ஆகிய நான்கு உறுப்பினர்கள் அடங்கிய துணைக் குழுவானது மேற்கண்ட கிராமத்தில் எதிர்வரும் 13.01.2023 அன்று ஆய்வு மேற்கொள்வதோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடவும் உத்தேசித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்தது கடந்த ஆண்டு டிச. 26-ம் தேதி தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார் என்று கண்டுபிடிப்பதற்காக திருச்சி டிஐஜி சரவண சுந்தரால் அமைக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் தலா 2 டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.