ஷனகா போராட்டம் வீண்: இலங்கை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி…!

கவுகாத்தி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்திய இஷன் கிஷனுக்கும், கடந்த டி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவுக்கும் அணியில் இடம் இல்லை. அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில்லும், ஸ்ரேயஸ் அய்யரும் அணியில் இடம் பிடித்தனர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சுப்மன் கில்லும், கேப்டன் ரோகித் சர்மாவும் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து விராட் கோலி களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த கேப்டன் ரோகித் 83 ரன்னில் போல்ட் ஆனார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தந்து 73வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கோலி 113 ரன்னும், ரோகித் 83 ரன்னும், கில் 70 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி தரப்பில் ரஜிதா 3 விக்கெட்டும், மதுஷான்கா, கருணாரத்னே, ஷனகா, டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெர்னாண்டோ 5 ரன்னிலும், அடுத்து வந்த குசல் மெண்டிஸ் ரன் எடுவும் எடுக்காமலும் சிராஜின் வேகத்தில் வீழ்ந்தனர்.

அடுத்து களம் இறங்கிய சரித் அசலங்கா தனது பங்குக்கு 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உம்ரான் பந்துவீச்சில் அவுட் ஆனார். இலங்கை அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசாங்கா 72 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் டி சில்வா 47 ரன்னிலும், ஹசரங்ஜா 16 ரன்னிலும், வெல்லாகலே ரன் எதுவும் எடுக்காமலும், கருணாரத்னே 14 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அதிரடியாக இலங்கை கேப்டன் ஷனகா கடைசி வரை களத்தில் நின்று சதம் அடித்தார். அவர் 108 ரன்கள் அடித்தார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி தரப்பில் உம்ரான் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஷமி, சஹால், பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.