Varisu Movie: வாரிசு படத்திற்கு இலவச டிக்கெட்… ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய  இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு  ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. ஜன.11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியாக இருப்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். 

அந்த வகையில், காஞ்சிபுரத்திலும் விஜய் மற்றும் அஜித் திரைப்பட கொண்டாட்டங்கள் கலைக்கட்ட துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஜன. 11 காலை 8 மணி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தானம் முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த ரத்த தான முகாமில் கலந்துகொண்டு ரத்தம் கொடுக்கும் விஜய் ரசிகர்களுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் வாரிசு படம் பார்ப்பதற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்கான விளம்பரம் போஸ்டர்கள் காஞ்சிபுரம் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. 

ஜன. 10, 11ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த ரத்த தானம் முகாமில் பங்கேற்று ரத்தம் கொடுப்பதற்கு முன் பதிவு செய்திருந்த  50 நபர்களுக்கு வாரிசு படத்திற்க்கான டிக்கெட்டினை இலவசமாக காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தென்னரசு நேற்று (ஜன. 10) வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் இன்று (ஜன. 11) காலை 8 மணிக்கு தொடங்க இருக்கும், இந்த ரத்ததான முகாமில் ரத்தம் கொடுக்கும் அனைவருக்கும் விஜய்யின் வாரிசு பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட தலைவர் தெரிவித்தார். 

மேலும் இது மட்டும் இல்லாமல் ஜன. 11ஆம் தேதி காலை ஆயிரம் பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயிர் காக்கும் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் செயல்பட்டு இருப்பது, பொதுமக்கள் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.