அஜித் – ஹெச். வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய்யின் வாரிசு படத்துடன் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
அப்போது இருந்து துணிவு – வாரிசு படங்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், எப்போதும் இல்லாத அளவில் துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப் அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது. இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல வங்கி அரசிற்கு தெரியாமல் 500 கோடி ரூபாயை வைத்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட ஒரு கொள்ளை கும்பல் அந்த பணத்தை கொள்ளையடிக்க வங்கிக்குள் செல்கிறது. ஆனால் ஏற்கனவே அந்த பணத்தை கொள்ளையடிக்க அஜித் உள்ளே இருக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே துணிவு படத்தின் கதை.
வலிமை படத்தில் அஜித்தின் தோற்றம், பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் துணிவு படத்தில் இரு மடங்கு அதிகமாக அனைத்து ரசிகர்களும் அஜித்தின் கெட்டப்பை ரசித்தனர். அந்த அளவிற்கு படு ஸ்டைலாகவும், மாஸாகவும் உள்ளார் அஜித். தனது வழக்கமான நடிப்பில் இருந்து வெளியே வந்து, ருத்ர தாண்டவம் ஆடி உள்ளார்.
மஞ்சு வாரியருக்கு படம் முழுக்க வரும் அளவிற்கு கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் பொருந்தி உள்ளார். போலீஸ் கமிஷனராக சமுத்திரக்கனி மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார். முதல் பாதி முழுக்கவே படு பயங்கரமாக வேகமாகவும் செல்கிறது. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இடைவெளி வந்தது போல் ஒரு உணர்வை தருகிறது. இரண்டாம் பாதியில் தான் வங்கியை கொள்ளை அடிப்பதற்கான காரணத்தை சொல்கின்றனர். அதுவும் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது படத்திற்கு கிடைத்த வெற்றி.
பொதுவாக கமர்சியல் படங்களில் ஆழமான கருத்துக்களை வைப்பதில் வல்லவர் வினோத். அந்த வகையில் துணிவு படத்திலும் வங்கி மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை துணிச்சலாக சொல்லி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. குறிப்பாக படத்தை நகர்த்திச் செல்ல அது பெரிதும் உதவுகிறது. துணிவு படத்தில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட் ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைக்கிறது. நிச்சயம் துணிவு படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.