சென்னை: ‘‘சட்டப்பேரவையில் ஆளுநரை விமர்சிக்கவோ, எதிராகப் பேசவோ கூடாது’’ என்று திமுக எம்எல்ஏக்களை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துவிட்டு பேசினார். இதையடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்வது என்பதற்கான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். சட்டப்பேரவையில் அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, தேசிய கீதம் பாடப்படும் முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து திமுக மாணவர் அணியினர் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கட்சி எம்எல்ஏக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ‘‘பேரவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆளுநரை விமர்சிக்கவோ, அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கவோ கூடாது. எதிர்க்கட்சியினர் அமளி செய்தாலும் அமைதி காக்க வேண்டும். சபையை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்’’ என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பொது இடங்களில் ஆளுநருக்கு எதிராக பேனர் வைப்பது, சுவரொட்டி ஒட்டுவது கூடாது என்று கட்சியினருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.