புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதத்தில், ‘‘அதிமுகவை பொருத்தமட்டில் கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர் தரப்பு கூறுவது போன்று இருந்தால் அனைத்து விவகாரத்தையும் தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டி வரும். அது சிரமமானது என்பதால் தான் பொதுக்குழுவிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உட்பட அனைத்திலும் விகிதாச்சார அடிப்படையில் தான் உறுப்பினர்கள் பொதுக்குழுவில் சேர்க்கப்படுகிறார்கள்.
குறிப்பாக கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கூட அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,விகிதாச்சார அடிப்படையில் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் இருந்தாலும் பிரச்சனை என்று ஒன்று வரும்போது அடிப்படை உறுப்பினர்களிடம் விவகாரத்தை கொண்டு செல்லலாம் என ஓபிஎஸ் தரப்பு கூறுவதும் கவனத்தில் கொள்ளக்கூடியதாக உள்ளது என தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி தரப்பு, ‘‘முன்னதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுதான் தற்போதும் நடந்துள்ளது. முன்பு எதிர்ப்பு தெரிவிக்காமல் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று சொல்லாத ஓபிஎஸ் தற்போது மட்டும் ஏன் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் அதனை நீக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மேலும் பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு. கடந்த ஜூலை 11 பொதுக்குழுவில் பங்கேற்ற 2460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு ஈ.பி.எஸ்சை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், கட்சிவிதி 19ன் படி உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பாக பொதுக்குழு இருக்கிறது. அது எடுக்கும் முடிவே இறுதியானதாகும். ஜூலை 11ம் தேதி கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டதால், அது அன்றோடு முடிவடைந்து விட்டது. மேலும் நான்கு ஆண்டுகள் பொறுப்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை.
உண்மையில் சொல்லப்போனால் அதிமுகவில் இல்லாத ஒரு விஷயத்தை கொண்டு வரவில்லை இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளை எடுத்துவிட்டு ஏற்கனவே இருந்த பொதுச்செயலாளர் பதவி தான் மீண்டும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தான் அனைத்து அதிகாரங்களிலும் இருக்கிறது என்பது ஓ பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். தற்போது இருக்கக்கூடிய அதிமுக பொதுக்குழுவும் செயற்குழுகும் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து உருவாக்கியதுதான். ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு தான் உருவாக்கிய ஒரு பொதுக்குழுவையே ஓபிஎஸ் குறை கூறுகிறார். கட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கட்சியின் நலனுக்காகவே இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களுக்கானதாக கிடையாது. அதனால் அதிமுக பொதுக்க்ழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீலி கண்ணீர் வடிக்கிறார். அதனை உண்மையான கட்சி தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்.
கேப்பிட்டல் ஹில் பகுதியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் என்ன செய்தார்களோ அதை தான் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தனர். குறிப்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கட்சி பணிகள் அனைத்தும் நிலுவையில் உள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வரும் சூழலும் உள்ளது. இவை அனைத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்து தனது தரப்பு வாதங்களை முடித்தார். இதையடுத்து இன்று அதிமுக கட்சி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளது. அப்போது முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.