சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டப்பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தமிழ் அறிஞர் அவ்வை நடராசன், பிரேசில் கால்பந்து வீரர் பீலே, வசனகர்த்தா ஆரூர் தாஸ் உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவை தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அதன்படி, முன்னாள் உறுப்பினர்களான ஜெயங்கொண்டம் அ.சின்னசாமி (1971-76), ஆண்டிமடம் தில்லை காந்தி என்ற கோ.ஆதிமூலம் (1985-88), கந்தர்வகோட்டை, திருவோணம், திருவையாறு தொகுதி (1971-88) உறுப்பினரும், முன்னாள்அரசு தலைமை கொறடாவுமான துரை கோவிந்தராசன், வலங்கைமான் ந.சோமசுந்தரம் (1967-76) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. பின்னர், உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு மறைந்த தமிழ் அறிஞர்கள் க.நெடுஞ்செழியன், அவ்வை நடராசன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், பிரபல ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைதலைவர் டி.மஸ்தான், பிரேசில் கால்பந்து வீரர் பீலே ஆகியோர் மறைவுக்கு பேரவை தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பிறகு, சமீபத்தில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் இ.திருமகன் ஈவெராவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவை நாள்முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.