நாட்டு நாட்டு பாடல் செய்த சரித்திர சாதனை! விருது விழாவில் துள்ளிகுதித்த ஆர்ஆர்ஆர் படக்குழு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோல்டன் குளோப் விருது விழாவில், விருது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல், `சிறந்த ஒரிஜினல் பாடல்’ விருதைத் தட்டிச் சென்றிருக்கிறது. இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று கோல்டன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2022-ம் வருடத்திற்கான கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இடம்பிடித்திருந்தது. ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது உலகளவில் உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. Hollywood Foreign Press Association வழங்கும் இந்த விருது வழங்கும் விழா, இந்திய நேரப்படி ஜனவரி 11-ம் தேதி அதிகாலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  நடைபெற்றது.

image

இதில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் (‘நாட்டு நாட்டு’ பாடல்) பிரிவிலும் நாமிஷேனுக்கு தேர்வுக்குழுவால் தேர்வாகின. அதன் முடிவில், நாட்டு நாட்டு பாடல் விருதை இன்று பெற்றுள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. விழாவில் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

image

இசையமைப்பாளர் கீரவாணி, விருதை பெற்றுக்கொண்டார்.

image

விருது அறிவிக்கப்பட்டவுடன், இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் எழுந்து சத்தமாக கத்தியபடி துள்ளிகுதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இந்த வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக தங்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்துள்ளது.

விருதுக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் `விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி’ எனக்கூறி ராஜமௌலி புகைப்படம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

 

image

ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, ‘செல்லோ ஷோ’ ஆகியப் படங்களும் இந்த விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்து இப்போது விருதை பெற்றுள்ளது. முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இவ்விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.