புதுடெல்லி: உ.பி.யை பாலிவுட் நகரை மிஞ்சும்வகையில் மாற்றும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு புதிய திரைப்பட கொள்கையை அறிவித்திருந்தது. ஏற்கெனவே, டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் ரூ.10,000 கோடி செலவில் திரைப்பட நகரம் தயாராகி வருகிறது. இதன் உள்ளே வருபவர்கள் தங்களின் 80 சதவீத பணிகளை முடிக்கும் வகையில் இது அமைய உள்ளது. அந்த வகையில், தற்போது பிரபலமாகி வரும் ஓடிடி தொழிலை ஊக்குவிக்கவும் உ.பி. அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.
இதன்படி ஓடிடியில் வெளியிடும்வகையில் திரைப்படம் மற்றும் தொடர்கள் எடுப்பவர்களுக்கு மானியமாக ரூ.1 கோடி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ‘பிலிம் பந்து’ (திரைப்பட நண்பன்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், திரைப்படம் அல்லது தொடர்களின் மொத்த செலவில் பாதித் தொகை அல்லது ரூ.1 கோடி ஆகிய இரண்டில் எது குறைவான தொகையோ அதை தயாரிப்பாளர்களுக்கு உ.பி. அரசு அளிக்க உள்ளது.
இதன் படப்பிடிப்பு முழுவதும் உ.பி.யில் எடுக்கப்பட வேண்டும் என்பதும் அதன் நிபந்தனையாக இருக்கும். திரைப்படங்கள் தொடர்பான இதர தொழில்களிலும் உ.பி.யை முன்னணியாக மாற்ற முதல்வர் யோகி விரும்புகிறார்.
இதற்காக, திரைப்படங்கள் தொடர்பான பொருட்கள் உற்பத்தி, டப்பிங், ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்தல் போன்ற தொழில்களுக்கு மானியம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தொழில் முதலீட் டுக்கான 25 சதவீத தொகை அல்லது ரூ.50 லட்சம் மானியமாக அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் தேசிய விருது பெற்ற முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி கூறும்போது “சிறிய திரைப்படங்களுக்கு பொதுமக்களின் வருகை குறைந்து விட்டது. சிறிய திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 கோடி அறிவிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், புதிய கலைஞர்கள் உயிர்பெறுவார்கள். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் இதை பின்பற்ற வேண்டும். பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்காக நான் உ.பி. முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.