பீகார் ஜெகனாபாத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது 18 மாத கைக்குழந்தை ஒன்று கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஜெகனாபாத் அருகே இரண்டு தரப்பினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் அங்கிருந்த பெண் ஒருவர் 18 மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே சண்டையில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் நிலத்தகராறு வாக்குவாதத்தில் இருந்து கைகலப்பு வரை முற்றிய நிலையில், கைக்குழந்தை கீழே தரையில் விழுந்துள்ளது. தரையில் விழுந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையில் எதிர் தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கியதாக உயிரிழந்த கைக்குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கைக்குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து பேசியிருக்கும் ஜெகனாபாத் போலீஸ் அதிகாரி, ” நிலத் தகராறில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த இந்த பெண் தனது 18 மாத குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே தகராறில் ஈடுபட்டுள்ளார். தகறாரு முற்றிய நிலையில் குழந்தை தரையில் விழுந்து இறந்திருக்கிறது. கைக்குழந்தையை கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
மேலும் தகராறில் ஈடுபட்ட எதிர் தரப்பினர் கற்கள் மற்றும் தடிகளை கொண்டு தாக்கியதாக தெரிவித்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரின் அடையாளங்களை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இறந்த குழந்தையை கைப்பற்றிய நிலையில், அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM