தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகள்!: நெல்லையில் ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.10 லட்சம் இழந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் இளைஞர் சிவன்ராஜ். இவர் தனது செல்போனில் கடந்த சில தினங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் ரம்மி விளையாடி சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். இறுதியாக நபர் ஒருவரிடம் கடன் வாங்கி நேற்று ஒரே நாளில் ரூ.1 லட்சத்தை இழந்திருக்கிறார்.  இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விஷம் குடிப்பதற்கு முன்னதாக தனது நண்பர்களை தொடர்பு கொண்டு தான் ஆன்லைன் ரம்மியால் மொத்த பணத்தையும் இழந்துவிட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சிவன்ராஜ் தந்தை பாஸ்கர் கூறுகையில், தனது மகனின் உயிரே இறுதியானதாக இருக்க வேண்டும். இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு அரசு அக்டோபர் 1ம் தேதி கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் காலாவதியாகியிருக்கிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.