சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி நெல், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
நெல் குவின்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்தது. பிறகு, திமுக ஆட்சிக்கு வந்து, 3-வது பருவ கொள்முதலும் தொடங்க உள்ளது. ஆனால், அறிவித்தபடி நெல், கரும்புக்கு விலை கொடுக்க தமிழக அரசு மறுத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. உரம் விலை, உற்பத்தி செலவு உயர்வை கருத்தில் கொண்டு, நெல் குவின்டாலுக்கு ரூ.3,000, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும்.
கோயில் நிலங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை பதிவு பெற்று சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை பாக்கியை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
வீராணம் ஏரியை உள்ளடக்கிய பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு கள ஆய்வு செய்ய மத்திய கனிமவளத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், ஒட்டுமொத்த வீராணம் ஏரியும் அபகரிக்கப்படும். இதனால், வீராணம் ஏரி மூலமாக பாசனம் பெற்று வரும் காவிரியின் கடைமடை பகுதிகள் பாதிக்கப்படும். சென்னையின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக பறிக்கப்படும். எனவே, முதல்வர் இதில் கவனம் செலுத்தி, நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் பொது விநியோக திட்டம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுதானியங்கள், பாரம்பரிய வேளாண் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில், இதற்கு முரணாக, செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அரிசியை விநியோகம் செய்யும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் கவுதமன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.