இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுத மோதல்களின் போது, மனி உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இலங்கை உள்நாட்டு போர் அல்லது ஈழப் போர் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கியது. சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரானது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி போரின் மூலம் முடிவுக்கு வந்தது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் நடைபெற்ற இறுதி போரில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் இலங்கைப் படை கைப்பற்றியது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி போர் முடிவுக்கு வந்ததாகவும், அதன் தலைவர் பிராபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.
மாஜி பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரன்ட் – தேர்தல் கமிஷன் அதிரடி!
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது, லட்சக்கணக்கிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இறுதிப் போரில் மட்டும் மூன்று நாட்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இலங்கை அரசு இலங்கையில் நடத்தியது இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும். அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி தனித்தமீழம் வேண்டுமா அல்லது இலங்கை அரசுடன் தொடர்வதா என்று முடிவெடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுத மோதல்களின் போது, மனி உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசு தடை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பி ஹெட்டியாராச்சிதே, கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகிய நான்கு பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள கனடா அரசு, அவர்கள் நான்கு பேரும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. கனடாவீல் உள்ள அவர்கள் 4 பேரின் சொத்து முடக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் 1983 முதல் 2009 வரை ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்துள்ளதாக கனடா வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.