ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ‛குளோடன் குளோப்' விருது
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'.
ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு…) நாமினேஷனிலும் பங்கேற்றது. இந்நிலையில், இன்று கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. இதில், ‛நாட்டு.. நாட்டு…' பாடல், சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
இதனையடுத்து, படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன், தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.