22 கிலோ கேன்சர் கட்டியை தொப்பை என நினைத்த பெண் – அகற்றியது எப்படி?

டெல்லியில் தொப்பை என நினைத்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்த பெண்ணின் வயிற்றில் 22 கிலோ கேன்சர் கட்டி இருந்தது கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உடல் எடையை குறைக்க டயட் இருந்துள்ளார். ஆனால் அவருடைய வயிறு மட்டும் பெரிதாகிக்கொண்டே சென்றுள்ளது. தனது டயட் முறையில் ஏதோ தவறு நேர்ந்ததால் தொப்பை கூடிவருவதாக நினைத்த அந்த பெண், வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டுள்ளார். இருப்பினும், நாளாக ஆக வயிறு பெரிதாகிக்கொண்டே சென்றுள்ளது. குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமல்லாமல், வயிறு வீங்கிக்கொண்டே சென்றுள்ளது. இதனை தொப்பை என நினைத்த அந்த பெண், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்திருக்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு வலி தாங்கமுடியாமல் போகவே வயிறு வெடித்துவிடும் என நினைத்து, டெல்லி தரம்ஷிலா நாரயணா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவருடைய கருப்பையில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் சதிந்தர் கவுர் கூறுகையில், “அந்த பெண் சில மாற்று தெரபிகள் மற்றும் டயட் முறையில் மாற்றம் செய்து பார்த்திருக்கிறார். மேலும், எடையை குறைக்க உடற்பயிற்சிகளையும் செய்துள்ளார். வெறும் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். வயிற்றில் இவ்வளவு பெரிய கட்டி இருந்தும் அவருக்கு எப்படி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டது என்பது எங்களுக்கு ஆச்சர்யமளிக்கிறது.
image
கிட்டத்தட்ட 8 – 9 மாதங்களுக்கு பிறகு வலி தாங்கமுடியாத அளவுக்கு செல்லவேதான் அவர் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். நான் இதுவரை பலருக்கும் கருப்பை புற்றுநோய் அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளேன். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை இதுவரை பார்த்ததில்லை. அவருடைய வயிற்றில் இருந்தது 22 கிலோ எடைகொண்ட பெரிய சைஸ் கட்டி. அதிர்ஷ்டவசமாக தக்க நேரத்தில் கண்டறியப்பட்டது.
நான்கு அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கமருந்து நிபுணர்கள் குழுவானது 3 மணிநேர தீவிர அறுவைசிகிச்சை மூலம், கருப்பை மற்றும் கருமுட்டைகளுக்கு சேதம் விளைவிக்காமல் கட்டியை முழுவதுமாக அகற்றிவிட்டது. மீண்டும் கட்டி வருவதற்கான வாய்ப்புகள் 10% இருந்தாலும், அவர் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.