நெல்லை: பொங்கல் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாளே கரிநாளாக தென் மாவட்ட மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்நாளில் அசைவ பிரியர்கள் ஆட்டிறைச்சியை விரும்பி வாங்கி சென்று அமைத்து உண்டு மகிழ்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளின் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லையில் மானூர், அம்பாசமுத்திரம் சேரன் மகாதேவி, இட்டேரி, பருத்திப்பாடு, மூலகறைபட்டி, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் மேலப்பாளையம் கால்நடை சந்தை கலைக்கட்டியுள்ளது. கேரளாவில் இருந்து வந்துள்ள ஆட்டிறைச்சி வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். ஆடுகளின் விலை அவற்றின் அளவை பொறுத்து 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. இதனால் பொங்கல் சந்தையான இன்று ஒரேநாளில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.