புதுடெல்லி: பீகாரை போன்று நாடு முழுவதும் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்கி வருகிறது. இது வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கி தற்போது இந்தியாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதன் முதலாக கடந்த 1888ம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவின் மக்கள் தொகை 25 கோடியே 38 லட்சம் மட்டுமே. அப்போது பாகிஸ்தானும், வங்காளதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தன. கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 ஆக இருந்தது. சமீபத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாட்டின் மக்கள் தொகை 135 கோடி என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இது சரியான எண்ணிக்கையாகவோ அல்லது மதிப்பீடாகவோ இருக்கலாம். நாட்டின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்பட இருந்தது. ஆனால் அப்போது கொரோனா காலமாக இருந்ததால் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படவில்லை. முன்னதாக இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், மாநில அரசுகள் தங்களது நிர்வாக எல்லைகளை (மாவட்டங்கள், தாலுகாக்கள் மற்றும் காவல் நிலையங்கள்) வரும் ஜூன் 30ம் தேதிக்குள் இறுதி ெசய்து கொள்ளலாம். காரணம், குறிப்பிட்ட பகுதியின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க முடியும். அதாவது அக்டோபர் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தொடங்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளது. அவ்வாறு அக்டோபர் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கினால், அது 2024 மார்ச்சில் முடிவடையும்.
ஆனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பத்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மேலும் லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பும் 2024 மார்ச்சில் வெளியிடப்படும். அதனால் லோக்சபா தேர்தல் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை ஒத்திவைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு வேண்டுமென்றே தள்ளிப்போடுவதாக எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கடந்தாண்டு மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், ‘கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
பட்டியலின ஜாதிகள் மற்றும் பழங்குடியினர் ஜாதிகள் தவிர மற்ற ஜாதியினரின் தரவுகளையும் சேகரிக்கும் திட்டம் இல்லை’ என்றார். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு, தங்களது மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பை தனது சொந்த செலவில் கணக்கெடுத்து வருகிறது. பீகாரில் ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரித்து செயல்படுத்தி வருவது போன்று, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் மேற்கண்ட் 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, ஜாதிவாரிய தரவுகளுடன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்ைல என்றால் அது பொதுப் பிரிவினர் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு எதிரான சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதனால் எதிர்க்கட்சிகள் பலனடைவதோடு, பாஜகவின் பெரும்பான்மை வாக்கு வங்கியும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திலும் ஜாதிவாரியக் கணக்கீடு சாத்தியமில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியாக இருக்கும். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுக்கு இடையில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023ல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. 2050ல் சீனாவின் மக்கள் தொகை 131 கோடியாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.