டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது சிறிதாக அந்நகரம் பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உத்தராகண்டின் கர்ணபிரயாக் நகரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசிடம் உள்ளூர் நகராட்சி உதவி கோரியுள்ளது.
பகுகுணா நகரில் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுதொடர்பாக சாமோலி மாவட்டபேரிடர் மேலாண்மை ஆணையம்வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோஷிமத் நகரில் 678 வீடுகளில் விரிசல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு கருதி81 குடும்பங்கள் இடம் மாற்றப்பட்டுள்ளன. ஜோஷிமத் நகரப் பகுயிதில் 213 அறைகள் தற்காலிகமாக வாழத் தகுந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றின் கொள்ளளவு 1191 என மதிப்பிடப்பட்டுள்ளது, இதனுடன், ஜோஷிமத் பகுதிக்கு வெளியே உள்ள பிபால்கோட்டியில் 491 அறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதன் கொள்ளளவு 2,205 ஆகும்” என்று கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உணவுப் பொருட்கள், போர்வைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களுக்காக தலா ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை அரசு நிர்வாகம் வினியோகித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இதனிடையே ஜோஷிமத் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு உடனே பட்டியலிடவேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவை வரும் 16-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.
சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி தாக்கல் செய்த இந்த மனுவில், பெரிய அளவிலான தொழில்மயமாக்கல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மக்களுக்கு உடனடி நிதியுதவி, இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.