என் அலுவலகத்தில் அறிமுகமான தோழி அவள். நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் என் குழுவில் சேர்ந்தாள். அவளின் பளிச் முகம், மனதில்படும் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இவையெல்லாம் அவள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாக அமைந்தன. தோழிகளானோம். எங்களின் மதிய உணவுக் குழுவிலும் இணைந்து கொண்டாள். அலுவலகம் சார்ந்து பேசும்போது கண்கள் படபடக்கப் பேசுபவள், குடும்பம் சார்ந்து பேசும்போது சற்றே அமைதியாவாள். இதைப் பலமுறை கவனித்து இருந்ததால், அவளின் குடும்பம் பற்றி எதுவும் கேட்டுக்கொண்டது இல்லை.
ஒருமுறை அதற்கான நேரமும் வந்தது. இருவரும் மாலை வேளையில் தேநீர் குடிக்க ஒன்றாகச் சென்றிருந்தோம். குடித்துவிட்டுக் கிளம்பும் நேரத்தில் மழை பெய்ய ஆரம்பிக்கவே நீண்ட உரையாடல் தொடங்கியது. என் குடும்ப போட்டோக்களை அவளிடம் காண்பித்தேன். `உங்க அம்மா போட்டோ காட்டுங்க’ என்றாள். அம்மா எப்போதும் கிச்சனில் இருப்பதால் நாங்கள் இருவரும் சேர்ந்து பெரிதாக எதுவும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது கிடையாது. கேலரியின் அடிவரை ஸ்க்ரோல் செய்து பார்த்ததில் சில புகைப்படங்கள் சிக்கின. அதிலும் அம்மா கொண்டையுடன், கலைந்த சேலையைக்கூடச் சரி செய்யாமல் நின்றிருந்தார். ‘இவங்க தான்’ என்று ஜூம் செய்து புகைப்படத்தைக் காண்பித்தேன்.
`இப்படி ஒரு போட்டோகூட நானும் அம்மாவும் சேர்ந்து எடுத்தது இல்ல’ என்று ஃபோனை பார்த்துக் கொண்டே சொன்னாள். `ஏன் கவலைப்படுற. இன்னைக்கு போய் எடுத்துரு’ என்றேன். அவளின் முகம் டக்கென சுருங்கியது. `அம்மா இல்லக்கா. தவறிட்டாங்க’ என்றாள். `சாரிப்பா, தெரியாம சொல்லிட்டேன்’ என்று சொல்லி அமைதியானேன். `தெரியாமதானேக்கா கேட்டீங்க, ஃபீல் பண்ணாதீங்க’ என்று என்னைத் தேற்றினாள். சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு, தன் கதையைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்.
”எனக்கு ஆறு வயசு இருந்தபோதே அம்மா தவறிட்டாங்க. உடம்பு சரியில்லாம இருந்தாங்களாம். எப்படி இறந்தாங்க; இறந்த அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு பெருசா எதுவும் நினைவில்ல. அம்மாவை தூக்கிட்டு போகும்போது எல்லாரும் அழுதாங்க. நானும் அழுதேன். ஆனா, அதுதான் அம்மாவைப் பார்க்குறது கடைசிமுறை. அம்மா இனிமே வரவே மாட்டாங்கன்ற உண்மை அப்போ எனக்குப் புரியல. விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு ஒவ்வொரு நாளும் அந்த நாளை நினைச்சு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் நேரம் அம்மாகூட இருந்திருக்கலாம். அம்மாவைக் கட்டிபிடிச்சு அழுதுருக்கலாம்னு தோணியிருக்கு.
அம்மா போனதுக்குப் பிறகு அப்பாதான் உலகம்னு ஆகிப்போச்சு. அவருக்கு நான்தான் எல்லாமே. காலையில் சோறு சமைக்கிறதுல இருந்து, குளிப்பாட்டுறது, என் துணியத் துவைச்சுப்போடுறது வரைக்கும் எல்லாமே அப்பாதான் பண்ணுவாரு. அப்பா சூப்பரா பார்த்துக்கிட்டாலும்கூட, அம்மா நினைப்பு எப்போதும் இருக்கும். ஸ்கூல்ல பசங்க எல்லாரும் அம்மா பத்தி பேசும்போதோ, அம்மாவைக் கூட்டிட்டு வரும்போதோ, நான் அம்மா சேலையை பிடிச்சுக்கிட்டு கடைக்குப் போனது ஞாபகம் வந்துரும். அழுதுருக்கேன். ஆனா, அப்பாகிட்ட காண்பிச்சது கிடையாது.
அப்பா அவரோட வேலையையும் பார்த்துக்கிட்டு என்னையும் பார்த்துக்க அவ்வளவு சிரமப்பட்டாரு. அப்பாவை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எத்தனையோ முறை சொந்த பந்தங்கள் வற்புறுத்துனாங்க. திடீர்னு வீட்டுக்கு கூட்டமா வருவாங்க. என்னை வெளிய அனுப்பிட்டு எல்லாரும் பேசுவாங்க. அது அப்பாவோட ரெண்டாவது கல்யாணம்பத்தினு என்னோட டீன் ஏஜ்லதான் புரிஞ்சுது. ஆனா, அப்பா கல்யாணத்தை உறுதியா மறுத்துட்டாரு.
`என் மகள நான் பார்த்துப்பேன்… ஏன் பொட்டப்புள்ளைய என்னால பார்த்துக்க முடியாதா’னு அப்பா கேட்டதுக்கு, ‘புள்ள வயசுக்கு வந்தா என்ன பண்ணுவ’னு கேட்டாங்க. கொஞ்சம் கூட யோசிக்காம , ‘என் புள்ள துணிய அப்பவும் நான் துவைப்பேன். அதுல எனக்கு எந்த அசிங்கமும் இல்ல’னு சொன்னாரு. எப்பவும் மறக்க முடியாத வார்த்தைக்கா அது. நான் வயசுக்கு வந்தப்போ நானும் அப்பாவும்தான் அந்த வீட்ல இருந்தோம். சொல்ல தயக்கமா இருந்தாலும், அப்பாகிட்டதான் சொன்னேன். அப்பாதான் நாப்கின் வாங்கிட்டு வந்து கொடுத்தாரு. அதுக்கு அப்புறம்தான் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்தாங்க. அந்த நிமிஷம் அம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணுச்சு.
நான் கேட்டதெல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்துருவாரு. எனக்கு விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறமும்கூட, சமையல் பண்றது அப்பாதான். அம்மா இல்லாத குறையில்லாம என்னைப் பார்த்துக்கணும்னு அவருக்கு ஆசை. எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வாரு. நான் ஆசைப்படுவேன்னு வித்தியாச வித்தியாசமான ஹேர் ஸ்டைல் கத்துக்கிட்டு பண்ணி விடுவாரு. மருதாணி வெச்சு விடுவாரு. அப்பா இருக்குற வரை எனக்கு தனியா இருக்கோம்னே தோணாது. ஆனா அவரு வேலைக்குப் போயிட்டா நான் வீட்ல தனியா இருப்பேன். ஏதோ ஒரு வெறுமை என்னைச் சுத்தி இருந்துட்டே இருக்கும். இன்னொரு அண்ணனோ, தம்பியோ, அக்கா, தங்கச்சியோ இருந்திருக்கலாம்னு ஃபீல் பண்ணிருக்கேன். நான் தனியா இருக்கேன். எனக்கு அம்மா இல்லைனு ஃபீல் பண்ணதெல்லாம் டீன் ஏஜ் வரைக்கும்தான். அதுக்கு அப்புறம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுடுச்சு.
டீன் ஏஜ் வரை நான் என்னைப் பத்தி மட்டும்தான் யோசிச்சேன். அப்புறம்தான் அப்பா பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அவரு தன்னோட மொத்த இளமையையும் எனக்காக விட்டுக் கொடுத்துருக்காரு. ஒரு கல்யாண வீட்டுக்குப் போகணும்னாகூட , நான் என்ன டிரெஸ் போடணும், நகை போட்டுருக்கேனானு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டு கசங்குன எதோ ஒரு சட்டையைப் போட்டுட்டு வருவாரு. அப்பா கையில் கத்தி வெட்டுனது, பாத்திரம் சுட்டதுனு ஏகப்பட்ட காயம் இருக்கும். எல்லாமே எனக்காகத்தான். எனக்கு கூடப்பொறந்தவங்க இல்லாதது கூட நல்லதுதான். இருந்திருந்தா அவங்கள வளர்க்க இன்னும் சிரம்மப்பட்டுருக்கணும். இதெல்லாம் புரிஞ்சதும், `என்னைய நீ ரொம்ப நல்லா பார்த்துக்கிற…ஆனா, உனக்காக நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோப்பா…வயசு பத்தியெல்லாம் யோசிக்காத, நாம் எல்லாம் ஒண்ணா இருக்கலாம்’னு ஒருமுறை சொன்னேன்.
என்ன நினைச்சாருனு தெரியல கட்டிப்பிடிச்சு ரொம்ப நேரம் அழுதாரு. அழுதுட்டு, `இந்த வாழ்க்கைக்கு நீ போதும் சாமீ. என்ன நீ சரியா கவனிக்கல, அதுக்காக இன்னொரு அம்மா வேணும்’னு சொல்லாம எனக்காகனு சொன்ன பாரு அது போதும் தாயீ’னு சொல்லி கட்டிப்பிடிச்சுக்கிட்டாரு. இந்த நிமிஷம்கூட எனக்கு குற்ற உணர்வு இருக்கத்தான் செய்யுது. அதை நிவர்த்தி செய்யணும்னா அப்பாவோட கடைசி காலம்வரை அவரை சந்தோஷமா பார்த்துக்கணும். என் கல்யாணத்தைப்பத்தி இப்போ பேச ஆரம்பிக்கிறாரு. நானும் போயிட்டா அந்த வெறுமையை அவரு தாங்கிப்பாரான்னு எனக்குத் தெரியல. கடைசி வரை அவரை கூட வெச்சுப் பார்த்துக்கணும்னு ஆசை இருக்கு. சமுதாயத்தில் சிங்கிள் மதர் பத்தின தெளிவு இப்போ வர ஆரம்பிச்சுருக்கு, அதே மாதிரி சிங்கிள் ஃபாதர் பத்தின புரிதலும் வரணும். ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா வரும் மனைவி என்னை சரியா பார்த்துக்க மாட்டாங்கன்ற பயத்துல தான் அப்பா கல்யாணமே பண்ணிக்கல. அன்பு, காதல்ங்கிறது ஒரு நபரை மட்டும் நேசிக்கிறது இல்ல. அவரையும் அவர் சூழலையும் அப்படியே ஏத்துக்கிறதுதான். இந்தத் தெளிவு வந்து சகமனுஷங்ககிட்ட அன்பை மட்டும் பரிமாறுனா என்னை மாதிரி எத்தனையோ குழந்தைகளுக்கு அம்மாவும், அப்பாவும் கிடைப்பாங்க” என்று சொல்லி முடித்தாள்…
திருமணம் என்பது உடலால் இணைவது அல்ல… துணையாய் நிற்பது என்பது தீர்க்கமாய் இன்னுமொரு முறை ஆழமாய் மனதில் பதிந்தது. அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்தபோது, வழக்கம் போல் அம்மா கிச்சனில் இருந்தார். அருகில் அழைத்து ஒரு போட்டோ எடுப்போம் என்றேன். `நல்ல சீல கட்டல’ என குறைப்பட்டுக்கொண்டார். `இந்தச் சேலையில் நீ அழகாதாம்மா இருக்க’ என்று சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.