பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழா: 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து, பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார்.

செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்திக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், அவரது நடைபயணத்தில் பிரபலங்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ராகுல் காந்தி உடன் உரையாடி வருகின்றனர். பல தரப்பு மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி, அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறார். அவரது இந்த நடைபயணம் வரும் 30 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் 21 கட்சிகளும் பங்கேற்கும் பட்சத்தில், அது, எதிர் வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.