புதுடெல்லி: இங்கிலாந்து முதன்முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயரலாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது.
அதன்பின் போயிங் விமானத் தில் 9 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட் வைக்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் கடலில் 35,000 அடி உயரத்தில் விமானத்திலிருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் அந்த ராக்கெட்டால், 9 செயற்கைக்கோள்களையும் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்த முடியவில்லை. இதனால் இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ அமைப்புக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கிலாந்தின் தோல்வி இஸ்ரோவின் சாதனைப் பதிவை நாம் எவ்வளவு அதிக மாக பாராட்ட வேண்டும் என்பதை எனக்குச் சொல்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.