தூத்துக்குடி பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடி காய்கறி சந்தையில் பொங்கல் பண்டிகைக்காண 10 வகை கிழங்குகள் வரத்து அதிகமாகி, நாட்டு காய்கறிகளான முருங்கைக்காய் வெண்டைக்காய் கத்தரிக்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் சூரிய பகவான் மற்றும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து வகையான கிழங்குகள் மற்றும் காய்கறிகளை வைத்து வழிபடுவர் இதற்காக பொதுமக்கள் எல்லா விதமான காய்கறிகளையும் வாங்குவர்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு சேப்பக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பிடி கிழங்கு, சிறு கிழங்கு, உள்ளிட்ட பத்து வகையான கிழங்குகள் மற்றும் பூசணி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. இந்த கிழங்கு வகைகள் கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நாட்டு காய்கறியான முருங்கைக்காய் கத்திரிக்காய் வெண்டைக்காய் ஆகியவை வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் கிலோ 200 ரூபாய் வரையும் வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய் கிலோ 80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அறுவடையில் கிடைத்த அரிசியுடம் வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையில் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழா.