கோல்டன் குளோப் வென்ற ‛ஆர்ஆர்ஆர்' : பிரதமர், இளையராஜா, கமல், ரஜினி வாழ்த்து

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் உள்ளிட்டோர் நடித்து, கடந்தாண்டு வெளியான படம் ‛ஆர்ஆர்ஆர்'. கீரவாணி இசையமைத்தார். பன்மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாக களமிறங்கியுள்ளது.

இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆனது. இதில், ‛நாட்டு.. நாட்டு…' பாடல், சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணிக்கும், ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கும், திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி பதிவிட்ட வாழ்த்து : ‛‛சிறப்பான சாதனை. இந்த மதிப்புமிக்க கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள் ராகுல், காலா பைரவா, பிரேம் ரக்சித், இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஊ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் ‛நாட்டு.. நாட்டு…' பாடலுக்காக 'கோல்டன் குளோப்' விருது வென்று தந்திருக்கிறார் கீரவாணி. முன்னமே யு-டியூப்பில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்'' என்றார்.

இளையராஜா கூறுகையில், ‛‛எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீரவாணி, ராஜமவுலி ஆகியோரின் கடன உழைப்பிற்கு கிடைத்த வெற்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறுகையில், ‛‛அசாத்தியமானது, இது அனைவருக்குமான முன்னுதாரணம். அனைத்து இந்தியர்கள் சார்பாகவும், உங்கள் ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துகள் கீரவாணி. இயக்குநர் ராஜமவுலி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி பதிவிட்ட வாழ்த்து : ‛‛எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும், இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப்பை கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றி,'' என பதிவிட்டுள்ளார்.

இதேப்போன்று பல திரையுலக பிரபலங்கள் கீரவாணி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.