திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக சபரிமலையில் தினமும் சராசரியாக 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக எருமேலியில் பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் பல வண்ண சாயங்களை பூசி நடனமாடி மகிழ்வார்கள். மகிஷியை ஐயப்பன் வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்த பேட்டை துள்ளல் பாரம்பரியமாக கடந்த பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று எருமேலையில் பேட்டை துள்ளல் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேட்டை துள்ளி முடித்த பின்னர் பக்தர்கள் மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு செல்வார்கள்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணம் பந்தளத்தில் இருந்து நாளை ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 16ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மகரஜோதியை தரிசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலையை நோக்கி பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.