சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் பொது மக்களின் வசதிக்காக, வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் 5 பேருந்து நிலையங்களுக்கு 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: எதிர்வரும் 15.01.2023 பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை 12.01.2023 முதல் 14.01.2023 ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.
இப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு 340 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- கோயம்பேடு பேருந்து நிலையம்
- மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
- பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் / பூவிருந்தவல்லி Bye Pass
- தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்
- கே.கே.நகர் பேருந்து நிலையம்
மேலும், பொங்கல் திருநாள் முடிந்து, சென்னை திரும்பும் பொது மக்களின் வசதிக்காக 17.01.2023 செவ்வாய்க்கிழமை மற்றும் 18.01.2023 புதன்கிழமை அன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் (PM & Night Shift) 50 பேருந்துகள் மற்றும் 18.01.2023 புதன்கிழமை & 19.01.2023 வியாழக்கிழமை அதிகாலை 125 பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.
பிராட்வே, தி.நகர், ஆவடி, திருவான்மியூர், பூந்தமல்லி, திருவொற்றியூர், எண்ணூர், குன்றத்தூர், திருப்போரூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 69 முழுநேர பேருந்துகள், 58 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 127 பேருந்துகள் இயக்கப்படும்.
வேளச்சேரி, திருவான்மியூர், செங்கல்பட்டு, அடையாறு, மாமல்லபுரம், பிராட்வே, தி.நகர், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், கோவளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு 89 முழுநேர பேருந்துகள், 26 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 115 பேருந்துகள் இயக்கப்படும்.
வள்ளலார் நகர், செங்குன்றம், தாம்பரம், திருவொற்றியூர், பிராட்வே, அம்பத்தூர், மந்தவெளி, தி.நகர், அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் இருந்து பூந்தமல்லிக்கு 42 முழுநேர பேருந்துகள், 15 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 57 பேருந்துகள் இயக்கப்படும்.
வடபழனி, கோயம்பேடு மார்க்கெட், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுவாஞ்சேரி, தாம்பரம், பெசன்ட் நகர், கிளாம்பாக்கம், பிராட்வே பேருந்து நிலையங்களுக்கு 8 முழுநேர பேருந்துகள் இயக்கப்படும்.
எண்ணூர், மாதவரம், செங்குன்றம், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், செங்குன்றம் , பிராட்வே பேருந்து நிலையங்களுக்கு 18 முழுநேர பேருந்துகள், 8 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 26 பேருந்துகள் இயக்கப்படும்.
வடபழனி, மீஞ்சூர், செங்குன்றம் ஆகிய இடங்களிலிருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு 4 முழுநேர பேருந்துகள், 3 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 7 பேருந்துகள் உட்பட 230 முழுநேர பேருந்துகள், 110 மாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் என மொத்த 340 பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.