தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் தராத நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் டிரைவர் தற்கொலை: ரூ.15 லட்சம் இழந்ததால் பரிதாப முடிவு

பணகுடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மி தடுப்பு மசோதாவை கவர்னர் கிடப்பில் போட்டது தான் தொடர் உயிர் இழப்பிற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ரகுநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சிவன்ராஜ் (33). பட்டதாரியான இவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 சகோதரிகள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சிவன்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தார்.

சமீபத்தில் இதில் ரூ.3 ஆயிரம் செலுத்தி விளையாடியதில் ரூ.7 லட்சம் வரை கிடைத்துள்ளது. இதனால் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த ரூ.7 லட்சத்தை இரட்டிப்பாக்கி ரம்மியில் கடன் வசதி பெற்று அதில் ரூ.14 லட்சத்தை செலுத்தினார். இதில் அவருக்கு எந்தப் பணமும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோரை நச்சரித்து தனக்குரிய பங்கு சொத்தை விற்றுத் தருமாறு தகராறு செய்துள்ளார். ஒரே மகன் என்பதால் பெற்றோர் ரூ.50 ஆயிரத்தை அவரிடம் வழங்கினர். அப்போது ஒரே நாளில் ரூ.1 லட்சத்தை இழந்துள்ளார். மேலும் ரம்மி நிறுவனத்திடம் கடன் பெற்றதிலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது.  

இதனால் விரக்தியடைந்த சிவன்ராஜை சமாதானப்படுத்த பெற்றோர் ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு தங்கள் சொத்தை விற்று ரூ.5 லட்சம் கடனை அடைத்தனர். கடைசியாக பெற்றோரிடம் ரூ.200 வாங்கி சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டருகே உள்ள தோட்டத்தில் மயங்கிக் கிடந்த சிவன்ராஜை விவசாயிகள் மீட்டு பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவன்ராஜ் ஆன்லைன் ரம்மியில் சுமார் ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்து, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. அவர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் ஆர்.என். ரவியிடம் நேரில் விளக்கம் அளித்தார். இருப்பினும் இன்னும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல், கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். இதனால் ஆன்லைன் ரம்மியை அரசால் தடை செய்ய முடியவில்லை. இதுவரை, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 50க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைகள் தொடர்வதற்கு ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னர் தான் காரணம் என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.