நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் ஆளுநர் ஆர்.என் ரவி, “திராவிட மடல், தமிழகம் அமைதி பூங்கா, பெரியார்” உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
ஆளுநர் உரை முடிந்தவுடன், ஆளுநரை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்ற அனைத்து வார்த்தைகளையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார்.
அதே சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசிக்கும் போதே, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார்.
சட்டப்பேரவையில் முதல்வரும், ஆளுநரும் நடந்துகொண்ட விதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திக்க உள்ளனர்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.
அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரி குடியரசு தலைவரிடம் நேரில் முறையிட திமுக முடிவு செய்துள்ளது.
நாளை காலை 11.45 மணிக்கு டி. ஆர் பாலு தலைமையிலான திமுக மக்களவை குழு குடியரசு தலைவரை சந்திக்கிறது.