புதுடெல்லி: காஷ்மீரில் வரும் 30ம் தேதி நடக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் மாநிலங்களை கடந்தது. கடந்த 5ம் தேதி மீண்டும் அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரை நேற்றுமுன்தினம் இரவு பஞ்சாப்புக்கு சென்றது. பாதயாத்திரை 12 மாநிலங்களை கடந்து வரும் 30-ம் தேதி ஜம்மு காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரில் யாத்திரை நிறைவடைகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று கூறுகையில்,‘‘ஒற்றுமை யாத்திரை நிறைவு தின விழாவில் கலந்து கொள்ள ஒருமித்த கருத்து உடைய 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபயணத்தில் ராகுல் காந்தி அழைப்பின் பேரில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பி.க்கள் பங்கேற்றனர். வரும் 30-ம் தேதி நிறைவு விழா நடக்கிறது. அதே நாளில்தான் தேசதந்தை மகாத்மா காந்தியும் சுட்டு கொல்லப்பட்டார். அவரின் நினைவாக இந் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.