ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நாளை சந்திக்க உள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான
திமுக
அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது.
அண்மையில், “தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது மிகச் சரியாக இருக்கும்,” என, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. இதற்கிடையே, நடப்பு 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
அப்போது திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற வார்ததைகளை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருக்கும் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தெரிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது சர்ச்சைக்கு உள்ளானது. ஆளுநரின் இந்த செயலை, அவை மீறல் என்று அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக, நாளை காலை 11:40 மணி அளவில், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, வில்சன், என்.ஆர். இளங்கோ, ஆ.ராசா உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க உள்ளனர்.
அப்போது, அரசியல் சாசன விதிமுறைகளை மீறி செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளதாகவும், மேலும் நிலுவையில் உள்ள நீட் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.