புதுடில்லி ‘பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு விசாரணையை முடிக்க, ஐந்தாண்டுகள் ஆகும்’ என, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உச்ச நீதி
மன்றத்தில் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள டிக்குனியா என்ற இடத்தில் கடந்த 2021 அக்., மாதம்,
விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில், நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தாக்கியதில், கார் ஓட்டுனர் மற்றும் இரண்டு பா.ஜ., தொண்டர்கள் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய காரில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்தார்.
மனு தாக்கல்
இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, உ.பி.,யில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன்
ஆசிஷ் மிஸ்ரா, ‘ஜாமின்’ கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த வழக்கு விசாரணையை வழக்கமான நடைமுறைப்படி நடத்தினால் எப்போது முடிக்க முடியும்’ என பதில் அளிக்கும்படி, விசாரணையை நடத்தி வரும் செஷன்ஸ் நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, செஷன்ஸ் நீதிபதி தரப்பில் இருந்து பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு
இதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்த வழக்கில், 208 சாட்சிகள் உள்ளனர்; 171 ஆவணங்கள் மற்றும் 27 தடய அறிவியல் துறை அறிக்கைகள் உள்ளன. வழக்கமான நடைமுறையின்படி, இந்த வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க ஐந்தாண்டுகளாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement