புதுடெல்லி: சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையங்களில் உலக அளவில் கோவை விமானநிலையம் 13வது இடத்தையும், விமானநிறுவனங்களில் இண்டிகோ 15வது இடத்தையும் பிடித்துள்ளன. விமான நிறுவனங்கள், விமான நிலையங்களின் இயக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் ஓஏஜி நிறுவனம் உலக அளவில் சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை வௌியிட்டுள்ளது. முதல் 20 இடங்களை கொண்ட அந்த பட்டியலில் விமான நிலையங்கள்பட்டியலில் கோவை விமான நிலையம் 13வது இடம் பெற்று உள்ளது. அதே போல் விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ விமான நிறுவனம் 15வது இடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 54வது இடத்தில் இருந்த இண்டிகோ இந்த முறை 15வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
முதல் இடத்தில் கருடா இந்தோனேசியாவும், 2வது இடத்தில் சபையரும், 3வது இடத்தில் யுரோவிங்ஸ், 4வது இடத்தில் தாய் ஏர்ஏசியா, ஜெஜூ ஏர்லைன்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. விமான நிலையங்களில் ஜப்பான் ஒசாகா முதல் இடம் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 20 இடங்களில் 10 இடங்களை ஜப்பான் விமான நிலையங்கள் பிடித்துள்ளன. அங்குள்ள விமான நிலையங்களில் விமானங்கள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படும். அதே சமயம் கோவை விமான நிலையம் 13வது இடத்தை பிடித்துள்ளது.