வாரணாசி: வாரணாசியில் இருந்து திப்ருகர் வரை 27 நதிகளின் வழியாக 51 நாட்களில் 4000 கி.மீ தூரம் செல்லும் உலகின் மிக நீண்டதூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை வங்கதேசம் வழியாக கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் 51 நாட்கள் பயணிக்கும் சொகுசு நதிக் கப்பல் நாளை தனது முதல் பயணத்தை தொடங்குகின்றது. உலகின் மிக நீண்டதூர நீர்வழிப்பாதை சொகுசு கப்பல் பயணமாக கருதப்படும் இதற்காக ‘எம்வி கங்கா விலாஸ்’ என்ற சொகுசு கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தியா, வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் 27 ஆறுகளைக் கடந்து 4,000 கி.மீ தூரம் வரை இந்த கப்பல் பயணிக்க உள்ளது. உலகின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வனச்சரணாலயங்கள் உள்ளிட்ட 50 சுற்றுலாத் தலங்களை இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகள் பார்த்து ரசிக்க முடியும். வாரணாசியில் தொடங்கும் கப்பல் பயணம் பீகாரின் பாட்னா, ஜார்க்கண்டின் சாஹிப்கன்ஞ், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, வங்கதேசத்தில் தாகா, அசாமில் கவுகாத்தி ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.
நாளை வாரணாசியில் இருந்து பயணத்தை தொடங்கும் இந்தக் கப்பல் மார்ச் 1ம் தேதி திப்ருகார் சென்று அடையும். இந்த கப்பலில் இசை, கலாசார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, 5 ஸ்டார் ஓட்டல் போன்ற உணவு விடுதிகள் என பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த கப்பலானது 62 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டதாகும். 3 தளங்களை கொண்ட இந்த கப்பலில் 36 சுற்றுலா பயணிகள் தங்க 18 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கங்கா விலாஸ் கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் மூலமாக நாளை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.