ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் 370 யூகலிப்டஸ், சீகை மற்றும் அகேசியா வகை மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.48.98 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தொகையை வனத்துறைக்கு வழங்க வேண்டும் என டேராடூனில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வள ஆய்வு மைய தலைமையகத்திற்கு வனத்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஊட்டி தெற்கு வனச்சரகர் நவீன் மற்றும் வன காப்பாளர் பாபு, வனவர் சசி உட்பட 5 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். டேராடூனில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைமையகத்தில் இருந்து அதிகாரிகள் குழுவினர் ஊட்டி வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஊட்டி மையத்தின் தலைவராக இருந்த மூத்த விஞ்ஞானி கண்ணன் டேராடூன் தலைமையகத்திற்கும், மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் அசாமிற்கும், மற்றொரு விஞ்ஞானி ராஜா ஒடிசாவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஊட்டி இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவராக சுந்தராம்பாள் நியமிக்கப்பட்டுள்ளார்.