2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வாகன கண்காட்சி துவங்கியது

புதுடெல்லி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வாகன கண்காட்சி டெல்லியில் நேற்று துவங்கியது. துவக்க நாளான நேற்று மாருதி சுசூகி, ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. இந்தியாவில் வாகன கண்காட்சி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு நடந்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் மின்சார வாகனங்கள் கண்காட்சி துவங்கியுள்ளது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிப்படுத்தின.

மாருதி சுசூகி நிறுவனம், தனது புதிய இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியது. இந்த காரில் 60 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. சுசூகியின் பேட்டரி பாதுகாப்பு தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 550 கி.மீ வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக்காரை சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் (ஜப்பான்) தலைவர் தோஷிஹிரோ சுசூகி அறிமுகம் செய்தார். 2025ல் இது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல்6, சியாஸ், எர்டிகா, பிரஸ்ஸா, வேகன் ஆர் பிளக்ஸ் பியூயல், பலேனோ, ஸ்விப்ட் உள்ளிட்ட 16 வாகனங்களை இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அயானிக் 5 இவி என்ற எலெக்ட்ரிக் காரை நடிகர் ஷாரூக்கான் அறிமுகம் செய்தார். இந்தக் காரின் துவக்க ஷோரூம் விலை ரூ. 44.95 லட்சம். இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 214 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 631 கி.மீ தூரம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதுதவிர, எம்ஜி 4 இவி காரும் காட்சிப்படுத்தப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹாரியர் இவி என்ற எலெக்ட்ரிக் கான்சப்ட் காரை அறிமுகம் செய்தது.
இதுதுவிர சியரா, அவின்யா எலெக்ட்ரிக் கான்சப்ட் கார்களும் அறிமுகமாகின்றன.

நாட்டின் மின்சார வாகன சந்தையில் தனது பங்களிப்பை 5 ஆண்டுகளில் 25 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில் புதிய கார்களை இந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. இதுபோல், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம், 2023 ஹெக்டார் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. 5 வகைகள் இதில் உள்ளன. ஷோரூம் துவக்க விலையாக சுமார் ரூ. 14.72 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் விலை ரூ. 22.42 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் அடுத்த தலைமுறைக்கான கார்னிவால் கேஏ4ஐ காட்சிப்படுத்தியுள்ளது. டூயல் சன்ரூப், 27 அங்குல அகலம் கொண்ட டிஸ்பிளே, சோலார் பேனல்கள் என பல்வேறு அசத்தல் அம்சங்கள் இதில் உள்ளன. பிஒய்டி நிறுவனம், அட்டோ 3 எலக்ட்ரிக் எஸ்யுவியில், புதிய பாரஸ்ட் கிரீன் வண்ண காரை அறிமுகம் செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.