சென்னை/கோவை: சென்னையில் `துணிவு’ திரைப்படம் பார்க்கச் சென்ற நடிகர் அஜித்தின் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடிவிட்டு கீழே குதித்தபோது முதுகு தண்டுவடத்தில் காயமடைந்து உயிரிழந்தார்.
நடிகர் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படங்கள் உலகம் முழுவதும் நேற்று வெளியாகின. சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று அதிகாலை 1 மணிக்கு துணிவு, காலை 4 மணிக்கு வாரிசு படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியாகின.
அதிகாலை ஒரு மணிக்கு துணிவு படம்பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த விஜய்யின் வாரிசு பட பேனர்கள், கட் அவுட்களை திடீரென அடித்து நொறுக்கி கிழித்துவிட்டுதியேட்டருக்குள் சென்றனர். அடுத்தகாட்சிக்கு வந்த விஜய் ரசிகர்கள், அஜித்தின் கட்-அவுட்களை கிழித்தெறிந்தனர். பின்னர் தியேட்டருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர்.
அவர்களை பவுன்சர்களும், போலீஸாரும் தடுத்து நிறுத்தினர். இதனால், மேலும், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு அதிரடியாக தியேட்டருக்குள் நுழைந்தனர். அப்போது இருதரப்புரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், தியேட்டர் வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
முன்னதாக, அஜித் ரசிகர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் ரோகிணி தியேட்டர் வளாகத்தில் திரண்டு ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்தபரத்குமார் (19), நண்பர்களுடன் ரோகிணி திரையரங்குக்கு சிறப்பு காட்சியை காண வந்திருந்தார். அப்போது, திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். ரசிகர்கள் கூட்டத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.
அப்போது, மெதுவாக சென்ற ட்ரெய்லர் லாரி மீது ஏறி பரத்குமார் நடனம் ஆடினார். சிறிது தூரம் சென்றதும் லாரியிலிருந்து கீழே குதித்தார். அதில் அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கினார்.
அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமார் நேற்று காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
கோவையிலும் தடியடி: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் நேற்று அதிகாலையில் திரையிடப்பட்டது. பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அதிகாலை ஒரு மணிக்கு துணிவு படம் வெளியானது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக, இரவு 11 மணியளவில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.
திரையரங்கு நிர்வாகத்தினர் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் உரிய நேரத்துக்கு முன்னதாக திரையரங்குக்குள் ரசிகர்களை அனுமதிக்கவில்லை. ரசிகர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில் ரசிகர்களின் ஒரு பகுதியினர் அந்த திரையரங்கின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் அங்கு ஆர்.எஸ்.புரம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திரையரங்கு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்களை வெளியேறுமாறும், காட்சி நேரத்துக்கு உள்ளே வந்தால் போதும் எனக்கூறி ரசிகர்களை வெளியேற்றிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை கலைக்க, போலீஸார் தடியடி நடத்தினர். தள்ளுமுள்ளுவில் 20-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர் ஒருவருக்கும் காயமேற்பட்டது. அதேபோல், நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், கோவையில் உள்ள சில திரையரங்குகளில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.
இதற்காக 2 மணியில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கு முன்பு திரண்டிருந்தனர். இரண்டு நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானதால், முக்கிய திரையரங்குகள் உள்ள சாலைகளில் நேற்று அதிகாலை நேரங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.